தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெறுகிறது.
விநாயகர் சதுர்த்தி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி அன்று உலகெங்கிலும் உள்ள இந்துக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்துக்கள் தங்களுடைய குடியிருப்புப் பகுதிகள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து 3 முதல் 10 நாட்கள் வரை பூஜை செய்து, விழா நிறைவு நாளில் பிரதிஷ்டை செய்த விநாயகர் சிலைகளை ஊர்வலமாகக் கொண்டுச் சென்று கடல் மற்றும் ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைப்பார்கள்.
விநாயகர் சதுர்த்தி திருவிழா நெருங்கி வரும் நிலையில் இந்தியா முழுவதிலும் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் கோவை, கடலூர், தேனி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் கலைநயத்துடன் பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்பட்டு வருகிறது. பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தும் விதமாக, விதவிதமாக, பரமசிவன், பார்வதி, முருகன், ஆஞ்சநேயர், கிருஷ்ணர், சித்தி, புத்தி ஆகியோருடன் விநாயகர் இருப்பது, பல்வேறு வாகனங்களில் அமர்ந்து இருப்பது என்று விநாயகர் சிலைகள்.
விநாயகர் சிலைகள் சுற்றுச்சுழலுக்குக் கேடு விளைவிக்காத வகையில் காகிதக் கூழ், கிழங்கு மாவு ஆகியவற்றால் தயாரிக்கப்படுகிறது. தற்போது, இந்த சிலைகளுக்கு வர்ணம் தீட்டப்பட்டு, அலங்கார ஒப்பனைகள் செய்யும் பணிகளில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளைத் தமிழக வியாபாரிகள் மட்டுமின்றி வெளிமாநில வியாபாரிகளும் ஆர்வத்துடன் வாங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.