சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
தமிழகப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிக் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அடுத்த ஆறு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மைய சென்னை மண்டல இயக்குநர் செந்தாமரை கண்ணன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வியாழக்கிழமை காலை வரை பல்வேறு இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக மேற்கு தாம்பரம், உத்தகண்டி பகுதிகளில் தலா 100 மி.மீ. மழையும், திருவொற்றியூர், சோழிங்நல்லூர், முகலிவாக்கம் ஆகிய பகுதிகளில் தலா 80 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.