சிறந்த சாதனை புரிந்த குழந்தைகளைத் தேசிய அளவில் கௌரவப்படுத்தும் விதமாகப் பிரதம மந்திரி தேசிய குழந்தைகள் விருது வழங்கப்படுகிறது.
மத்திய அரசின் குழந்தைகள் மற்றும் மகளிர் அமைச்சகத்தின் சார்பில் 2024-ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரி தேசிய குழந்தைகள் விருது பெற வருகிற 31-ந் தேதிக்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனச் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த விருது வீரதீரமாக செயல்படும் குழந்தைகளுக்கான விருது மற்றும் சிறந்த குழந்தைகளுக்கான விருது என இரண்டு பிரிவுகளாக வழங்கப்பட உள்ளது. 18 வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளின் வீர தீர செயல்கள், விளையாட்டு, சமூக சேவை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் கலை மற்றும் பண்பாடு, புதிய கண்டுபிடிப்புகள் ஆகிய துறைகளில் சிறந்த சாதனை புரிந்த குழந்தைகளைத் தேசிய அளவில் கௌரவப்படுத்தும் விதமாக 2024-ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரி குழந்தைகள் விருது வழங்கப்பட உள்ளது.
மேற்படி விருதுக்குத் தகுதியுடைய குழந்தைகள் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து வருகிற 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விருது பெற விரும்பும் குழந்தைகள் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
தகுதிகள் உடைய விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு 2024-ஆம் ஆண்டு குடியரசு தினத்திற்கு முந்தைய வாரத்தில் குடியரசு தலைவர் கையால் விருது வழங்கி கௌரவிக்கப்படுவார். இந்த விருதுடன் ரூபாய் 1 லட்சம், பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.