நிலவில் மீண்டும் பள்ளத்தைக் கண்ட ரோவர், தவழ்ந்து விளையாடும் குழந்தையைப் போல் சுற்றிச் சுற்றி வந்து தனது பாதையை மாற்றி இருக்கிறது. இந்தக் காட்சிகள் அடங்கிய காணொளியை இஸ்ரோ வெளியிட்டிருக்கிறது.
கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டு, கடந்த 23-ம் தேதி வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், நிலவில் தனது ஆராய்ச்சியைத் தொடங்கி நடத்தி வருகிறது.
தனது ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, நிலவின் தட்பவெட்ப நிலையை கணக்கிட்ட ரோவர், கந்தகம் இருப்பதையும் கண்டுபிடித்தது. அதேபோல, அலுமினியம், கால்சியம், இரும்பு, கோரோமியம், டைட்டானியம், மாங்கனீசு, சிலிக்கான் மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவை இருப்பதையும் கண்டுபிடித்திருக்கிறது.
இதனிடையே, தனது ஆய்வுப் பாதையில் சுமார் 4 மீட்டர் விட்டம் கொண்ட ஒரு பள்ளத்தைக் கண்டு சுதாரித்த ரோவர், தனது பாதையை மாற்றி புதிய பாதையில் பயணித்து வந்தது. மேலும், விக்ரம் லேண்டரையும் புகைப்படம் எடுத்து அனுப்பி இருந்தது. இந்த நிலையில், தனது பாதையில் மிகப்பெரிய பள்ளம் இருப்பதை மீண்டும் கண்டுபிடித்த ரோவர், சுற்றிச்சுற்றி தனது பாதையை மாற்றிக் கொண்டிருக்கிறது. இதை விக்ரம் லேண்டர் காணொளியாக பதிவு செய்திருக்கிறது.
Chandrayaan-3 Mission:
In-situ Scientific ExperimentsAnother instrument onboard the Rover confirms the presence of Sulphur (S) in the region, through another technique.
The Alpha Particle X-ray Spectroscope (APXS) has detected S, as well as other minor elements.
This… pic.twitter.com/lkZtz7IVSY
— ISRO (@isro) August 31, 2023
இந்தக் காணொளியை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் இஸ்ரோ, ஒரு குழந்தையைப்போல பிரக்ஞான் ரோவர் நிலவில் சுற்றிச் சுற்றி விளையாடுகிறது என்று குறிப்பிட்டிருக்கிறது. இது குறித்து இஸ்ரோ வெளியிட்டிருக்கும் பதிவில், “பாதுகாப்பான பாதையைத் தேடி ரோவர் சுழற்றப்பட்டது. இந்தச் சுழற்சி லேண்டர் இமேஜர் கேமரா மூலம் படம் பிடிக்கப்பட்டது. சந்தா மாமாவின் முற்றத்தில் ஒரு குழந்தை விளையாட்டுத்தனமாக உல்லாசமாக இருப்பதை, தாய் பாசத்துடன் பார்ப்பது போன்ற உணர்வு இல்லையா?” என்று தெரிவித்திருக்கிறது.