கோவை மாவட்டம் காரமடை அருகே கோயில் திருவிழாவில் சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்றதற்கு இஸ்ரோவுக்கும், கடவுளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் 1008 மண் விளக்குகளால் இஸ்ரோ லோகோ ஒளிரவிடப்பட்டது.
நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் கடந்த 23-ம் தேதி வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இதையடுத்து, விக்ரம் லேண்டரில் இருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் அதன் ஆராய்ச்சி பணிகளைச் மேற்கொண்டு வருகிறது. இந்த வரலாற்றுச் சாதனையை உலக முழுவதும் உள்ள இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஒன்னிபாளையம் எல்லை கருப்பசாமி கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலில் பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்ததது. அப்போது சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்றதற்கு கடவுளுக்கும், இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் இஸ்ரோ லோகோ போன்று 1008 விளக்குகள் ஏற்றி வைத்து விழா நடைபெற்றது.
எல்லை கருப்பசாமி கோயிலில் நடைபெற்ற, இந்த நிகழ்ச்சியில் 108 மீட்டர் நீளம் கொண்ட இந்தியத் தேசியக் கொடியைப் பக்தர்கள் எடுத்து வந்து தேச ஒற்றுமையை வெளிப்படுத்தினர். மேலும், 1008 மண் விளக்கு தீபங்கள் ஏற்றப்பட்டு இஸ்ரோ லோகோ மற்றும் நன்றி என்ற வாசகம் அமைக்கப்பட்டு விஞ்ஞானிகளுக்கும் கடவுளுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி காண்போரைக் கவரும் வகையில் அமைந்தது.
மேலும், 108 ஆன்மீகப் பெரியவர்களும், 108 தூய்மைப் பணியாளர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிலவிற்கு தீபாராதனை காட்டி சிறப்பு வழிப்பாடு நடத்தினர். இதில் கோவை மற்றும் சுற்றவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.