ரஷ்யா-உக்ரைன் போர் தீவிரமடைந்திருக்கும் சூழலில், பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் சர்வதேச அளவில் பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன், பிரதமர் மோடி சந்திப்பு ரஷ்யா உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருமா ? இந்த பயணத்தின் நோக்கம் என்ன ? என்ற கேள்விகளும் எழுந்திருக்கின்றன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரியில் ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் உக்ரைனுடனான இந்திய வர்த்தகத்தில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. அதற்கு முன்னர் இந்தியா-உக்ரைன் வர்த்தகம் 28 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. போர் தொடங்கிய பின்னர் இது, வெறும் 6000 கோடி ரூபாயாக குறைந்தது. இந்த வர்த்தகத்தை மீட்டெடுக்க இந்தியா தொடர்ந்து தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.
இந்தியா- ரஷ்யாவுடன் எந்த அளவுக்கு நெருக்கம் காட்டுகிறதோ, அதே அளவுக்கான நெருக்கத்தை ஐரோப்பிய நாடுகளிடமும், அமெரிக்காவிடமும் காட்டி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக சர்வதேச நாடுகளுடன் நல்ல உறவுகளை இந்தியா முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மேம்படுத்தி வருகிறது.
இது போருக்கான காலம் அல்ல என்பது தான் இந்தியாவின் நிலைப்பாடு என்றும், மனித இனத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சவால்களை எதிர்கொள்ள எல்லோரும் ஒன்றாக இணையும் நேரம் இது என்றும், அதனால் தான் இந்தியா பேச்சுவார்த்தையில் நம்பிக்கை வைத்துள்ளதாகவும் கூறிய பிரதமர் மோடி, தான் தற்போது நடைபெற்று வரும் போருக்கு அமைதியான முறையில் தீர்வு காண உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் வலியுறுத்தப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதுவரை உக்ரைனுக்குள் சென்று ரஷ்யா தாக்குதல் நடத்துவதை நேரடியாக கண்டிப்பதை இந்தியா தவிர்த்து வந்துள்ளது. 6 வாரங்களுக்கு முன்னதாக ரஷ்யா சென்றிருந்த பிரதமர் மோடி புதினை சந்தித்து பேசியதை நேரடியாகவே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டித்திருந்தார்.
உலகெங்கிலும் உள்ள நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்த நிலையில் இந்தியா வேறுவிதமாக முடிவெடுத்தது. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெயை வாங்குவதை அதிகரித்து, மேற்குலக நாடுகளால் பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்திய ரஷ்யாவின் பொருளாதார உயிர்நாடியாகவும் இந்தியா செயல்பட்டு வருகிறது.
ரஷ்யாவுக்கு இந்தியா ஆதரவாக உள்ளது போல் ஒரு தோற்றம் சர்வ தேச அளவில் உருவானது. இந்நிலையில் பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம், இந்தியா நடுநிலையாகவே உள்ளது என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறது.
வரும் அமெரிக்க அதிபர் தேர்தல் புவிசார் அரசியலை மாற்றலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேட்டோ மற்றும் உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் அமெரிக்க அரசை விமர்சித்து வரும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதிபரானால் அமெரிக்க ஆதரவு உக்ரைனுக்கு கிடைக்காது என்ற அச்சம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில், ரஷ்யாவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணும் நாடுகளான இந்தியா மற்றும் சீனா சமாதானத்துக்காக ரஷ்ய அதிபர் புதினுடன் உக்ரைன் சார்பில் பேச முடியும் என்றும், போரையும் நிறுத்த முடியும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திட்டமிடுகிறார்.
இந்தியா- உக்ரைன் இரு நாடுகளுக்கு இடையே தூதரக உறவுகள் தொடங்கி 30 ஆண்டுகள் விட்ட நிலையில் முதன் முறையாக உக்ரைன் சென்ற இந்திய பிரதமர் பேச்சுவார்த்தை மூலம் அமைதிக்கான பாதையை அமைக்க அழைப்பு விடுத்திருக்கிறார்.
இது ஒரு புறம் என்றாலும், உக்ரைனுடன் இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அதன்படி இந்திய விமானப்படையின் (IAF) பெரிய அளவிலான An-32 ராணுவப் போக்குவரத்து விமானங்கள், உக்ரைனின் மேற்பார்வையின் கீழ் அந்நாட்டின் 40 விமானங்களையும், இந்தியாவில் 65 விமானங்களையும் மேம்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது . போரின் காரணமாக 40 விமானங்களில் கடைசி ஐந்து விமானங்கள் உக்ரைனில் சிக்கி உள்ளன.
இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள கடற்படைகள் பயன்படுத்தும் விசையாழிகளின் உற்பத்திக்கு முக்கியமான இடமான Mykolaiv இல் உள்ள Zorya-Mashproekt வளாகம் 2022ம் ஆண்டு மார்ச் மாதம் ரஷ்ய ராணுவத்தினரால் தாக்கப்பட்டது. இதனால் இந்தியாவுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டது.
இப்படி நிறைய இடையூறுகள் உக்ரைன்- ரஷ்யா போரால் இந்தியாவுக்கும் ஏற்படுகிறது. இதற்கான தீர்வுகளை பிரதமர் மோடியின் பயணம் ஏற்படுத்தி தந்திருக்கிறது.
வர்த்தகம், விவசாயம், மருந்துகள், பாதுகாப்பு, கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் கலாச்சாரம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, தொழில், உற்பத்தி, பசுமை எரிசக்தி போன்ற களங்களில் வலுவான கூட்டுறவை ஆராய்வது குறித்தும் தலைவர்கள் விவாதித்தனர்.
மேலும் 2012ம் ஆண்டு உருவான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் கீழ் இந்திய-உக்ரேனிய கூட்டு பணிக்குழுவின் 2-வது கூட்டத்தை எதிர்காலத்தில் இந்தியாவில் நடத்த இருநாடுகளும் ஒப்புக்கொண்டிருக்கின்றன.
பேரிடர் மண்டலங்களில் விரைவாகப் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட அதிநவீன நடமாடும் மருத்துவமனையான பீஷ்ம் கியூப்பை, பிரதமர் மோடி உக்ரைனுக்கு வழங்கி இருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைனின் சுதந்திர தினத்திற்கு ஒரு நாள் முன்னதாக, பிரதமர் மோடி மேற்கொண்ட இந்த பயணம் பெரும் வெற்றி பெற்றிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.