போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு நடமாடும் மருத்துவமனை வசதியை இந்தியா வழங்கியுள்ளது.
உக்ரைன் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கியை சந்தித்து, இந்தியா சார்பில் நடமாடும் மருத்துவமனை வசதியை அளித்தார்.
ஆரோக்கிய மைத்ரி திட்டத்தின்கீழ், வடிவமைக்கப்பட்ட இந்த மருத்துவமனையில் 15 அங்குலம் கொண்ட பெட்டிகளில் அனைத்து மருந்து பொருட்களும், கருவிகளும் இருக்கும் என்றும்,
போர் அல்லது இயற்கைப் பேரிடரின்போது மருத்துவத் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு இவை வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் ட்ரோன் வாயிலாக இந்த நடமாடும் மருத்துவமனையை வான், கடற்பரப்பில் எளிதில் கொண்டு செல்லலாம் என கூறிய அதிகாரிகள், இதன் எடை அதிகபட்சமாக 20 கிலோ வரை மட்டுமே இருப்பதால், தனிநபரால் எளிதில் தூக்கிச் செல்ல முடியும் என்றும் தெரிவித்தனர்.
அத்துடன் ஒரு கனசதுர பெட்டியின் மூலம் சுமார் 200 வகையான அவசர நிலையை எதிர்கொள்ள முடியும் என்றும் அதிகாரிகள் கூறினர்.
இந்த கனசதுர பெட்டிகளில் உள்ள மருந்து பொருட்களைக் கொண்டு அறுவை சிகிச்சைகள் கூட செய்ய முடியும் என தெரிவித்த அதிகாரிகள், குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மின்சாரம் மற்றும் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யவும் இதில் வழிவகை செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.