மதுரையில் தனியார் மகளிர் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த நிலையில், விடுதி கட்டிடத்தை இடித்து அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்ராபாளையம் தெருவில் தனியார் பெண்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. அங்குள்ள குளிர்சாதனப்பெட்டி திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில், இரண்டு பெண்கள் உயிரிழந்த நிலையில், படுகாயமுற்ற மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், விடுதி உரிமையாளர் இன்பா ஜெகதீஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். விடுதி அமைந்துள்ள கட்டிம் பழமையாக உள்ளதாகவும், இதுதொடர்பாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நோட்டீஸ் அளிக்கப்பட்டிருந்ததும், முறையான அனுமதி பெறாமல் விடுதி செயல்பட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கையாக விபத்து நடந்த தனியார் தங்கும் விடுதியை இடித்து அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் சங்கீதா, அனுமதியின்றி செயல்படும் அனைத்து விடுதிகளுக்கும் சீல் வைக்கப்படும் என தெரிவித்தார்.
இதற்கிடையே விபத்து நிகழ்ந்த போது புகைமண்டலத்தில் சிக்கித் தவித்த மாணவி ஒருவர் சொல்போன் மூலம் அவருடைய சகோதரரை தொடர்பு கொண்டு காப்பாற்றுமாறு கூறும் ஆடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.