மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட சீதாராம் யெச்சூரி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வெளியிட்டுள்ள செய்திக் குறி்ப்பில், மாணவர் தலைவராக இருந்து தேசிய அரசியலில் நுழைந்து நாடாளுமன்ற உறுப்பினராக தனக்கென தனி முத்திரையை பதித்தவர் சீதாராம் யெச்சூரி என புகழாரம் சூட்டியுள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் குறிப்பில், இடதுசாரி கட்சியினருக்கு ஒளிக்கீற்றாக திகழ்ந்த சீதாராம் யெச்சூரி, அனைத்து கட்சியினருடன் நட்பு பாராட்டியதற்காக எப்போதும் நினைவுகூரப்படுவார் என்று கூறியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், யெச்சூரியின் இறப்பு அரசியல் களத்தில் பேரிழப்பை ஏற்படுத்திவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்ட இரங்கல் செய்தியில், பொது வாழ்வில் யெச்சூரி ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும் என தெரிவித்துள்ளார்.
யெச்சூரி மறைவுக்கு இரங்கல் தெரிவித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், டெல்லி ஜெஎன்யு-வில் தாம் படித்தபோது தனக்கு யெச்சூரி சீனியர் எந்றும், அவரது இழப்பு கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஈடுசெய்ய முடியாதது என்றும் கூறினார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பில், சீதாராம் யெச்சூரி நாட்டைப் பற்றிய ஆழமான புரிதல் கொண்டிருந்ததாகவும், அவர் உடனான நீண்ட உரையாடலை இழப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மாணவப் பருவத்திலேயே அவசர நிலையை எதிர்த்து நின்றதால், நீதியை நிலைநாட்டுவதில் யெச்சூரியின் அர்ப்பணிப்பு உணர்வு வெளிப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், சீதாராம் யெச்சூரியின் இறப்பு தேசிய அரசியலில் மிகப்பெரிய இழப்பு என கூறியுள்ளார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாடு வெளியிட்ட அறிக்கையில், அடிமட்டத் தொண்டர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தமைக்காக சீதாராம் யெச்சூரி எப்போதும் நினைவுகூரப்படுவார் என்று குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் டி.ராஜா, சீதாராம் யெச்சூரியின் இறப்பு ஒட்டுமொத்த இடதுசாரி கட்சியினருக்கும் பேரிழப்பு என வேதனை தெரிவித்தார்.