தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
திருச்சி மாநகர் பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இதனால் அப்பகுதியில் சென்ற வாகனங்கள் நீரில் தத்தளித்தபடி சென்றன. மேலும் சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்களை சீரமைக்காததே மழைநீர் தேங்க காரணமென அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
தஞ்சை மாவட்டம் மானாங்கோரை, மாத்தூர், பசுபதி கோவில், அய்யம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.இதனால், சாலையோர கடை வியாபாரிகள் பெரிதும் பாதிப்படைந்தனர்.
தூத்துக்குடி மாநகரப் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதிகளில் பெய்த மழையால், குறைதீர்க்கும் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள் மழையில் நனைந்து அவதியடைந்தனர்.
இதேபோல் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. மேலும் வரதராஜபுரம் பகுதியில் உள்ள புளியமரத்து ஓடையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
நாகை நகர் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் சுற்று வட்டாரப் பகுதியில் காலை முதலே கனமழை வெளுத்து வாங்கியது. தோப்புத்துறை, தாணிகோட்டகம், நெய்விளக்கு, கரியாப்பட்டினம், ஆயக்காரன்புலம், புஷ்பவனம் ஆகிய பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.