சென்னையில் மழையுடன் கூடிய காற்று வீசுவதால், சாலையில் செல்லும் வாகனங்கள் ஊர்ந்து செல்கிறது. ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. மேலும், மழையுடன் காற்றும் வேகமாக வீசி வருவதால், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர்.
குறிப்பாக, வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் வாகனங்கள் எப்பொழுதும் மின்னல் வேகத்தில் சீறி பாய்ந்து செல்லும் நிலையில், தற்போது, முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி ஊர்ந்து செல்கிறது. முன்னால் செல்லும் வாகனங்கள் கூட தெரியாத நிலை ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் மழை பெய்துவருகிறது. OMR சாலை, பெருங்குடி, கந்தன்சாவடி, துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அரசு எச்சரித்துள்ளதால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
இதேபோல் வேளச்சேரி ஏஜிஎஸ் காலனியில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறி வருகின்றனர்