சென்னை நீலாங்கரையில் சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிகளை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் போது, ஈவெரா குறித்து சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து சீமான் வீட்டை த.பெ.தி.க. நிர்வாகிகள் முற்றுகையிட முயன்றனர்.
அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்துவைத்துள்ளனர். இதனிடையே, சீமான் வீட்டு முன்பு நிறுத்திவைக்கப்பட்டு இருந்த நிர்வாகி ஒருவரின் கார் கண்ணாடியை சிலர் உடைத்தனர்.
இந்த தகவல் தெரிந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் சீமான் வீட்டு முன்பு குவிந்தனர். இதனால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனிடையே, புதுச்சேரியில் தனியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், சீமான் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், சீமான் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர் தனது கருத்தை வாபஸ் பெற வலியுறுத்தியும், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஏராளமானோர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை முற்றுகையிட முயன்றனர்.
மேலும், சீமான் படத்தை செருப்பால் அடித்தும், கட்சி கொடியை கிழித்தெறிந்தும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். முன்னதாக, இருதரப்பினரும் மாறிமாறி கோஷமிட்டதால், அங்கு பதற்றம் ஏற்பட்டது.