ஈரானின் அதிரடி தாக்குதல் எதிரொலியாக இந்தியாவின் ஆயுதங்களை வாங்குவதற்கு தீவிரம் காட்டியிருக்கிறது ஐக்கிய அரபு அமீரக அரசு. இது அந்நாட்டிற்கு பாதுகாப்பு அளிப்பது மட்டுமின்றி ஆயுத சந்தையில் இந்தியாவின் செல்வாக்கை உயர்த்துவதாகவும் அமைந்துள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.. இந்த செய்தி தொகுப்பில்…
அமெரிக்க, இஸ்ரேல் – ஈரான் இடையிலான போரால் வளைகுடா நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்தன. அமெரிக்காவிற்கு உதவியதற்காக ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், பக்ரைன், துபாய் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தனது கோபத்தை வெளிப்படுத்தியது. இந்நிலையில் எதிரிகளின் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளவும், தக்க பதிலடி கொடுப்பதற்கும் தன்னை தீவிரமாக தயார்படுத்தி வருகிறது ஐக்கிய அரபு அமீரகம். ஆயுத கொள்முதலை அதிகரிக்கும் வகையில் இந்தியா மற்றும் பிற நாடுகளிடம் இருந்து பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவது குறித்து பரிசீலித்து வருகிறது.
அந்த வகையில், இந்தியாவின் மிக அதிநவீன ஆயுதங்களான பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை மற்றும் ஆகாஷ்தீர் வான் பாதுகாப்பு கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவற்றை வாங்க மத்திய அரசுடன் ஐக்கிய அரபு அமீரகம் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நகர்வு, வெறும் ஆயுத வியாபாரம் என்பதை தாண்டி, மத்திய கிழக்கின் புவிசார் அரசியலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆயுதங்கள் வழங்கும் நாடுகளின் பட்டியலில், 54 சதவீத ஏற்றுமதியுடன் அமெரிக்கா முன்னிலையில் உள்ளது. இந்த சூழலில் ஒரே நாட்டைச் சார்ந்திருக்காமல் இந்தியா, தென்கொரியா போன்ற நாடுகளிடம் இருந்தும் ஆயுதங்களை வாங்க ஐக்கிய அரபு அமீரகம் வியூகம் வகுத்துள்ளது.
அதுமட்டுமின்றி, சமீபத்தில் சவுதி அரேபியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. சவுதி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையே மறைமுகமான தலைமைத்துவ போட்டி நிலவி வரும் நிலையில், இந்தியாவுடன் கைகோர்ப்பது சவுதி-பாகிஸ்தான் கூட்டணிக்கு ஒரு வலுவான பதிலடியாக இருக்கும் எனவும் புவிசார் நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஒருகாலத்தில் அதிக அளவில் ஆயுதங்களை இறக்குமதி செய்து வந்த இந்தியா, தற்போது உலகின் 85க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்து வருகிறது.
கடந்த 2025-26 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த பாதுகாப்பு உற்பத்தி ஒரு லட்சத்து 78 ஆயிரம் கோடி ரூபாய் என்ற வரலாற்று சாதனை அளவை எட்டியது. இது முந்தைய நிதியாண்டை விட 15 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சி. கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி சுமார் 110 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் ராணுவ தளவாடங்கள், ட்ரோன்கள் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்களுக்கு பிற நாடுகளை சார்ந்திருப்பது பெருமளவு குறைந்துள்ளது.
மேலும், 2025-26 ஆம் நிதியாண்டில் 38 ஆயிரத்து 424 கோடி ரூபாய் அளவிற்கு பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து சாதனை படைத்தது இந்தியா. இது கடந்த நிதியாண்டை விட 62 சதவீதம் அதிகமாகும். இந்த இலக்கை 2029- 2030 ஆம் ஆண்டுக்குள் 50 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில், இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டி ஒப்பந்தம் கையெழுத்தானால், அது உலகளாவிய பாதுகாப்பு ஆயுத சந்தையில் இந்தியாவின் செல்வாக்கை பல மடங்கு உயர்த்தும். அத்துடன் சர்வதேச ராஜதந்திர உறவுகளில் இந்தியாவை ஒரு தவிர்க்க முடியாத சக்தியாகவும் நிலைநிறுத்தும்…
















