வாழ்க்கையில் குறுக்கு வழிகளைத் தேர்ந்தெடுப்பதை இளைஞர்கள் கைவிட வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
டெல்லி விஞ்ஞான் பவனில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் சுயசரிதை நூலை பிரதமர் மோடி வெளியிட்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ராம்நாத் கோவிந்தின் வாழ்க்கை மற்றும் அனுபவங்களை இளம்தலைமுறையினர் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும், அவரின் அனுபவங்களிலிருந்து அனைவரும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது எனவும் கூறினார். ரீல்ஸ் மற்றும் சமூக ஊடகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துபவர்களின் காலத்தில் நாம் வாழ்கின்றோம் எனக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, இந்த காலத்தில் குறுக்கு வழிகள் மலிந்துள்ளது என தெரிவித்தார். ரயில் நிலையங்களில் அடிக்கடி எழுதப்பட்டிருக்கும் ஒரு விஷயத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும் எனக் கூறிய பிரதமர் மோடி, குறுக்குவழி இளைஞர்களின் வாழ்க்கையை குறுக்கிவிடும் என சுட்டிக்காட்டினார். மேலும், ஆளுமைகளின் சுயசரிதையை இளைஞர்கள் படிப்பதால், அந்தந்த காலத்தின் வரலாற்றின் நிகழ்வுகளை அறிய முடியும் என பிரதமர் மோடி கூறினார்.
















