தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட குரோம்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் காசநோய் மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் கடும் அவதியடைந்தனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட குரோம்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் காசநோய் மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்தது.
குறிப்பாக காசநோய் மருத்துவமனை செல்லும் சாலையில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியது. இதனால் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளும், சிகிச்சை பெற வந்த புறநோயாளிகளும் கடும் அவதிக்குள்ளாகினர்.
அதேபோல, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையிலும் மழைநீர் சூழ்ந்ததால், தரைத்தளத்தில் இருந்த நோயாளிகள் அனைவரும் முதல் தளத்திற்கு மாற்றப்பட்டனர். மேலும், மருந்துகள் வாங்குவதில் சிரமம் ஏற்படுவதை தவிர்க்க மருந்தகமும் அருகில் உள்ள புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டது.
ஜிஎஸ்டி சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மணல் மூட்டைகளைக் கொண்டு காவல்துறையினர் அமைத்த தடுப்புகளை மீறி மழைநீர் மருத்துவமனைக்குள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.