காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1600 கோடி கிடைத்தது தொடர்பாக ராகுல் காந்தி விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பேசினார். அப்போது, இந்திய அரசியலில் கறுப்புப் பண ஆதிக்கத்தை ஒழிப்பதற்காக தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.தற்போது அந்தத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் கறுப்பு பணம் வெளிவருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறேன். அதை நீக்குவதற்குப் பதிலாக, சீர்திருத்தங்கள் இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.
எனது தனிப்பட்ட கருத்து என்னவெனில், தேர்தல் பத்திரங்கள் அரசியலில் கறுப்புப் பணத்தை கிட்டத்தட்ட முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டன என்று தான் கூற வேண்டும்.
கடந்த, 2014ஆம் ஆண்டு பாஜகவுக்கு கிடைத்த நன்கொடைகளில், 81 சதவீதம், அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து ரொக்கமாகவே வந்தது. இது 2018ல் 18 சதவீதமாக குறைந்தது. 2023ஆம் ஆண்டில் 3 சதவீதமாக குறைந்துள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 1,600 கோடியும், இண்டி கூட்டணிக்கு எங்களைவிட அதிகமாகவும் கிடைத்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விளக்கம் அளிப்பரா என்றும் அமித் ஷா கேள்வி எழுப்பினார்.